Saturday, May 28, 2011

சமுதாயத்தினர் அன்றைய நிலை

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அடக்கு முறை அது. உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும். அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது. செருப்புப் போடக் கூடாது. தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது. மாடி வைத்து வீடு கட்டக் கூடாது. பசுக்களை வளர்க்கலாம். ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்கவேண்டும்.

இப்படி நாளுக்கு நாள் அவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிக்கொண்டே போனதன் விளைவு? பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட அந்த சமூகம் வீறுகொண்டு எழுந்தது. தங்களை அடக்கியவர்களையும் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் எதிர்த்து அவர்கள் போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. வரலாறு காணாத அந்தப் புரட்சியை செய்தவர்கள் நாடார் சமூக மக்கள்.

திருநெல்வேலி, இராமநாதபுரத்து மண்ணின் மைந்தர்கள் இவர்கள். மதுரை, கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை என்று அவர்கள் பரந்து கிடக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடார்களே.

சான்றார், சான்றோர், நாடாள்வார் என்றழைக்கப்படும் நாடார்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும், பதனீர் இறக்குவோரும் இருந்தனர்.

மதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனப் பரவலாக நம்பப்படுகிறது. மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

நாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள், தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை.
பதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. எனினும் பனைமரம் நாடார்களின் புனித மரமாக எண்ணப்படுகிறது. பனைமரத்தை நுனி முதல் வேர் வரை பயனுள்ளதாக்கிக் காட்டியவர்கள்.

தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் இடையே பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களே நாடார்கள் என்றும் சொல்லப்படுகிறது. `பத்திரகாளியின் மைந்தர்கள்' என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

தங்களை உயர்ந்த எண்ணம் உள்ளவர்களாக நாடார்கள் போற்றிக் கொண்டாலும் கோயில்களுக்குள் சென்று சாமி கும்பிட உரிமை, அன்று மறுக்கப்பட்டது. அடக்குமுறை மண்டிய இந்த இருண்ட காலத்தில்தான் நாடார்களிடம் இந்த சமூகக் கொடுங்கோன்மையை எதிர்க்கும் எண்ணம் உதயமாயிற்று. சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஆனால் அங்கேயும் மேலாடை மறுக்கப்பட்டது கண்டு மக்கள் கொதித்து எழுந்தனர். அதனால், 1820_ல் அது சமூக விடுதலைக்கான போராட்டமாக வெடித்தது.

பெண்களை மேலாடை அணிய வைத்து பொது இடங்களில் நடமாடச் செய்தனர்.இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர்கள், 1882 மே மாதம் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் ஆண்கள் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர். கொலையும் செய்யப்பட்டனர். சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மறுத்த ஆண்களை கொடுமைப்படுத்தினர். கோயில்களையும் பள்ளிகளையும் தீயிட்டனர். நெய்யாற்றின் கரை, எரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழும் பல இடங்களில் சிறுசிறு கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.

இதுபோதாது என்று, திருவாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815_1829) ``நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது'' என்று பிரகடனம் செய்தார்.

இப்பிரகடனம்தான் நாடார் குலமக்களின் கோபத்தீயை வானளாவில் வளர்த்துவிட்டது. இனியும் பொறுக்க முடியாது என்று நாடார் சமூக மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். எதிரிகளை நோக்கிப் புறப்பட்டார்கள்..................

No comments:

Post a Comment