Saturday, May 28, 2011

உழைப்பால் உயர்ந்த சமுதாயம்

`உழைத்தால் உயரலாம்' என்பதற்கு முன் உதாரணம் நாடார் சமூகம்தான். நாடார் மக்களிடையே பெரும் சாதனை படைத்தவர்கள் மிகப் பலர்.

அய்யா வைகுண்டசுவாமி: எளிய நாடார் குடும்பத்தில் முத்துக்குட்டி என்ற பெயரில் பிறந்தவர். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தவர். நாடார் உள்ளிட்ட சமூக மக்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்ற அடக்குமுறைக்கு எதிராக எல்லோரையும் தலைப்பாகை கட்ட வைத்து சாதி வெறியை எதிர்த்துப் போராடியவர்.
                          
மார்ஷல் நேசமணி: குமரித் தந்தை, குமரி மாவட்டத்தின் சிற்பி. 1956ல் நாஞ்சில் நாட்டை கேரளாவோடு இணைக்க வேண்டும் என்று முயற்சித்த போது `நாங்கள் தமிழர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். தமிழ் மரபுக்கு சொந்தக்காரர்கள்' என்று மார் தட்டியதோடு, தமிழ் மரபு சீர் குலைந்துவிடக் கூடாது என்று போராடி நாஞ்சில் நாட்டைத் தமிழகத்தோடு இணைத்த தீரர்.

காமராஜர்: தமிழ் இனத்தில் ஒரு சாதாரண நாடார் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் `கிங்மேக்கரான' மாமனிதர்; பச்சைத் தமிழர். அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் ஏழைகளுக்கு `கல்விக்கண்' திறக்கப்பட்டது. சத்துணவு கிடைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர். எல்லா சமூகத்தாருக்காகவும் உழைத்த கர்ம வீரர். `நாம் பெற்ற செல்வம்' என்று ஒவ்வொரு நாடாரையும் பெருமை கொள்ளச் செய்தவர். நாடார் இனத்துக்கே பெருமை சேர்த்தவர்.

கே.டி.கோசல்ராம்: பாலைவனம் போல் வறண்டு கிடந்த பூமி. கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. இருண்ட வாழ்வோடு மக்கள் சுருண்டு வாழத் தொடங்கிய போது மழை மேகமாய் வந்து, மணிமுத்தாறு அணையை, தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்து வசூலித்து கட்ட வைத்த கடமை வீரர். சுதந்திரப் போராட்ட தியாகி.
                
                                   
பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்:மற்ற இனத்தவருக்கு இருப்பது போல் நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர். பேருந்துகளில் காலி இருக்கைகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் அமரக் கூடாது என்று இருந்த நிலையை உடைத்தெறிந்து அவர்களை சரிசமமாக உட்கார வைத்தவர். சென்னையில் உள்ள பாண்டிபஜார் இவரது பெயரில் உருவானதே...
நாடார் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, தங்களது பரம்பரை பழக்கவழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் மாற்றியமைக்க முற்பட்டனர். ஆண்கள் பார்ப்பனர் போன்று வேட்டி கட்டவும், பூணூல் போடவும் தொடங்கினர். பெண்கள் பாரம்பரியமான கனத்த ஆபரணங்களையும், காது வளையங்களையும் தவிர்த்தனர்.

விதவைகள் வெள்ளைச் சீலை கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். விதவைகள் மறுமணம் தடை செய்யப்பட்டது. (இப்போது மறுமணத்தை ஆதரிக்கிறார்கள்.) பெண்கள் தண்ணீரை தலையில் எடுத்துச் செல்வதைத் தடுத்து, இடுப்பில் எடுத்துவரப் பணிக்கப்பட்டனர்.

திருமண ஊர்வலங்களின்போது செல்வ செழிப்பினைக் காட்ட பல்லக்குகளைப் பயன்படுத்தினர். பெரும்பாலான நாடார்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள். சிலர் வைணவர்களாகவும் இருந்தனர். முருகக் கடவுள் நாடார் சமூகத்தின் சிறப்பு தெய்வம். பத்ரகாளி, மாரியம்மன், அய்யனார் என்று சிறுதெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. கோயில் திருவிழாவின்போது முளைப்பாரி எடுப்பது பிரசித்தம்.

நாடார் திருமணத்தின்போது தாய்மாமனுக்கு முக்கியத்துவம் உண்டு. கன்னியாகுமரி, சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் பெண் வீட்டார் கிலோ கணக்கில் நகை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எவ்வளவு பெரிய சொந்தம் இருக்கிறது என்பதைக் காட்ட திருமணத்தின்போது நடத்தப்படும் `அலந்தரம் செய்வது' என்ற சடங்கு மிக முக்கியமானது
       
                         ``நாடார்கள் நாடாண்டவர்கள் என்பதை இன்று நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள். இடைவிடா உழைப்பினாலும் சிக்கனத்தாலும் நாடார்கள் சாதாரண மளிகைக்கடை முதல் கம்ப்யூட்டர் துறை வரை உலகளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். மற்ற சமூகத்தவரும் பயன்பெறும் வகையில் நாடார் சமூகம் உழைத்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நாடார்களின் வெற்றி ரகசியமும் அதுவே'' என்கிறார் சென்னை, நெல்லை_தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் க்ஷி.ஜி.பத்மநாபன் நாடார்.

உண்மைதான். இன்று நாடார்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தங்கள் செல்வாக்கினை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டனர்..

             `தினத்தந்தி'யைத் தந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாமரர்கள் எழுத்துக்கூட்டி தமிழைப் படிக்க வைத்தவர் ஆதித்தனார். நாடார் மகாஜன சங்கம் உருவாகக் காரணமாய் இருந்தவர் பொறையார் ரத்னசாமி நாடார். நம் நாட்டிற்கு `தமிழ்நாடு' என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை மறக்கமுடியாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளைக்காரனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற காசிராஜன், தூக்குமேடை ராஜகோபால் ஆகியோரின் வீரம் பலருக்கு எடுத்துக்காட்டு. வானம் பார்த்த சிவகாசி பூமியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் உருவாக்கி `குட்டி ஜப்பான்' என்று சொல்ல வைத்து அனைத்து இனமக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தவர்கள் சிவகாசி பி.அய்யநாடாரும் ஏ.சண்முகநாடாரும் ஆவர்.

நீதிக்கட்சி வி.வி.ராமசாமி, விருதுநகர் சீமான் எம்.எஸ்.பி.ராஜா. வெள்ளைச்சாமி நாடார், ஏ.வி.தாமஸ், ஜெயராஜ் நாடார், டாக்டர் சந்தோஷம் என்று உழைப்பில் உயர்ந்த நாடார்களில் எண்ணற்றவர்களைக் காட்டலாம்.காவல் துறைக்கு பெருமை சேர்த்த அருள் ஐ.ஜி.யை எந்த சமூகத்தவரும் மறக்கமாட்டார்கள். 
   

இன்று கணினி உலகில் நுழைந்து உலகப் பணக்காரர்களுள் ஒருவராகத் திகழும் சிவ்நாடார், பழுத்த அரசியல் தலைவர் குமரிஅனந்தன், அரசியல் தலைவரும் நடிகருமான சரத்குமார் என்று பலரை இந்த சமூகத்தின் நட்சத்திரங்களாகக் காட்டலாம்.
      

1 comment:

  1. "Nanum Ivargalai Pol VIP Avan" Endu Ovoru Nadarum Ninaithu Ulaika vendum...
    Anbudan
    Rajan Nadar,
    Tuckerammalpuram,
    Tirunelveli.

    ReplyDelete