Friday, November 11, 2011

எஸ்.பொன்னையா நாடார்

 சிவசுப்பிரமணிய நாடாரின் புதல்வராக எஸ்.பொன்னையா நாடார் 1861 இல் பிறந்தார். ஆறுமுகநேரிக்கு சாலை வசதி திருநெல்வேலி-திருச்செந்தூர் இரயில் வசதி ஆகியவற்றை முதலாவதாகக் கொண்டு வந்த ”பொன்னான மாமனிதர்” இவரே. கூர்மதியும் ஆங்கிலப் புலமையும் மிக்கவர். தம்முடைய திறனால் பலவேறு திட்டங்களைத் தென்பகுதிக்குக் கொண்டு வந்தார். 23.02.1923 இல் இரயில்வே போக்குவரத்து மேதகு சென்னை கவர்னர் கோஷன் பிரபு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அந்நாளில் காயல்பட்டினம் ஆறுமுகநேரி உப்பு வியாபாாிகள் சார்பில் எஸ்.பி.அவர்களுக்கு தங்க மெடல் பரிசளிக்கப்பட்டது. இவர் ஆற்றிய சேவையின் ஒரு பகுதி.
தலைவர் - காயல்பட்டினம் உப்பு வர்த்தக கம்பெனி. 1883-1903.
தலைவர் - காயல்பட்டினம் யூனியன் 1896-1916
உறுப்பினர் - தாலுகா போர்டு 1896-1933
உறுப்பினர் - ஜில்லா போர்டு 1903-1933
நிர்வாகி - இந்து சரஸ்வதி நடுநிலைப்பள்ளி ஜில்லா கல்விச்சபையின் உறுப்பினராக 12 ஆண்டுகள் கலால் ஆலோசனைக் கமிட்டி தர்மபரிபாலனக் கமிட்டி நிலச்சுவான்தார்கள் சங்கம் என இவர் ஏற்ற பொறுப்புகள் ஏராளம். இவர் வகித்த பதவிகளுக்கு இவரால் பெருமை சோ்ந்தது.திருச்செந்தூர் சன்னதித் தெருவில் உள்ள நாடார் மண்டபம் அடிப்படை மட்டும் போடப்பட்டு கிடந்த வேளையில் முன்னின்று வசூல் செய்து கட்டடத்தைக் கட்டியவர் எஸ்.பி. ஆவார். நாடார் மகாஜன சங்கம் உருவாகிட தென்பகுதியில் இருந்து பிரதிநிதியாகப் பொறாயாறு சென்று கலந்து கொண்டார். தட்சிண(மாற) நாடார் பேட்டைகளில் முன்னாளிலிருந்த இடர்பாடுகளைக் களைந்து வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளார். ஏரல் சேர்மன் அருணாசல சுவாமியுடன் நட்புக் கொண்டிருந்தார். 24.1.1906 இல் சென்னை வருகை தந்த பிரிட்டிஷ் இளவரசர் திரு.ஜோர்ஜ் அவர்கள் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த 300 பேர்களுக்கு நேர்முக விருந்து வழங்கினார். அவர்களுள் எஸ்.பி.யும் ஒருவர்.குடிநீர் சாலைவசதி பாசனம் வேளாண்மை கல்வி மருத்துவம் சுகாதாரம் பனைத் தொழிலாளர் நலன் சமுதாயப்பணி என சேவைகள் பல செய்தார்.

பி.எஸ்.இராஜபலவேசமுத்து நாடார்

  பி.சிவசுப்பிரமணிய நாடார் சீனிநாடாச்சியின் மூத்தப் புதல்வராக பி.எஸ்.இராஜபலவேசமுத்து நாடார் 30.05.1909 இல் பிறந்தார். சமுதாயப்பணியில் தலைசிறந்தவராக உலகமெங்கும் உள்ள நாடார்களால் போற்றப்படுகிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்த நாடார் பேட்டைகளை ஒருங்கிணைத்து வெற்றி கண்டார். 1942 இல் காங்கிரஸ் பணியிலிருந்து தன்னுடைய திறனை சமுதாய வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்தி வெற்றி கண...்டார். 

தட்சிணமாற நாடார் சங்கத்தின் தலைவராக இவர் பொறுப்பேற்று நாடார் குலத்தலைவராகத் திகழ்ந்தார். இவர் தீர்த்து வைத்துள்ள சமுதாயச் சச்சரவுகள் ஏராளம். பிற சமுதாயத்தினரை அன்புடன் பண்புடன் நடத்துவார். தம்முடைய ஆங்கிலப் புலமையால் அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினார்.

தலைவர் தட்சிணமாற நாடார் சங்கம். 
உதவித்தலைவர் நாடார் மகாஜன சங்கம் 
தலைவர் ஆறுமுகநேரி பஞசாயத்து போர்டு 
உறுப்பினர் திருநெல்வேலி ஜில்லா போர்டு 
உறுப்பினர் திருச்செந்தூர் தாலுகா போர்டு 
தலைவர் ஆறுமுகநேரி நல்லூர் கீழ்க்குளம் ஒப்படி சங்கத் தலைவர் 
உதவித்தலைவர் காமராஜ் கல்லூரி தூத்துக்குடி 
ஸ்தாபகர் தட்சிணமாற நாடார் சங்கக் கல்லூரி - கள்ளிக்குளம் 
ஸ்தாபகர் பம்பாய் தட்சிணமாற நாடார் சங்க கல்லூரி- கள்ளிக்குளம் (இப்பள்ளிதான் பம்பாயின் முதல் தமிழ்ப் பள்ளியாகும்) 

நாடார் சமுதாயத்திற்குத் தனியார் மற்றும் அரசால் இன்னல்கள் வரும் சமயம் அதனை நுட்பமாக அணுகி தீர்த்து வைத்துள்ளார். சமுதாயப் பணியில் “சான்றோர் குலத்திலகமாக“ விளங்கினார். அனைவராலும் பி.எஸ்.ஆர் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

Wednesday, June 1, 2011

விருதுநகர் நாடார் வரலாறு:

விருதுநகர் வரலாறு:

விருதுநகர் என்றால் வணிகம் என்று பொருள் கொள்ளும் அளவிற்கு புகழ் பெற்றது.

"Virudhunagar Produces Nothing But Controls Everything" என்று சிறப்புடன் கூறப்படுகிறது.
“பொதியை எந்தி வண்டியிடிலே, பொள்ளாச்சி சந்தையிலே

விருதுநகர் வியாபாரிக்குச் செல்லக்கண்ணு – நீயும்

வித்துப் போட்டுப் பணத்தை யெண்ணு செல்லக்கண்ணு”

என்று கவிஞர் மருதகாசி பாடியுள்ளார்.அரசியலில் காமராசரின் பங்கு மகத்தானது. விடுதலைப் போரிலும் பின் தமிழகத்தை உருவாக்குவதிலும் காமராசர் வழிகாட்டியாக இருந்தார். காமராசரின் அட்சி “பொற்காலம்” என்று கூறலாம்.

இலவச ஆங்கில வழிக்கல்வி அனைவருக்கும் வேருபாடின்றி அளித்த முதல் பள்ளி 1889ஆம் ஆண்டு விருதுநகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீருடையை முதலில் விருதுநகர் பள்ளிகள் தான் கடைபிடித்தன.

மகமை, மற்றும் உறவின்முறை மூலம் பள்ளிகள், கல்லூரிகள் இயக்குவதில் விருதுநகர் புகழ்பெற்றது என்று கூறலாம்.

ஆன்மீகத்தில் ஆலயவழிபாடு மட்டும் அல்லாமல் பல சங்கங்கள் வைத்து வேதம், கீதை புராணங்கள், தேவாரம் என அனைத்தையும் மக்கள் படிக்கும் வண்ணம் செய்வதில் பெருமை வாய்ந்தவர்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பங்குகொள்வதைக் காணலாம்.
                                          
                 தமிழகத்தின் “பொற்காலம்” என்று கருதப்பட்ட முன்னால் முதலமைச்சர் காமராசரின் ஆட்சியை யாரும் மறக்க முடியாது. கருப்பு காந்தி, தென்னாட்டு காந்தி என்று போற்றப்படும் கர்ம வீரர் காமராசரை தந்தது விருதுநகர். இன்று விருதுநகர் என்றால் காமராசர் பிறந்த மண் என்று உலகெங்கும் விருதுநகரின் புகழ் பரவியுள்ளது. கல்வி, தொழில், நீர் நிலைகள், மின்சாரம் என்று தமிழகத்தின் அனைத்து துறையிலும் புரட்சி செய்த காமராசர் தன் குடும்பம், தன் மக்கள், தன் ஊர் என்று பாராத தன்னலமற்ற எளிமையான நாடு போற்றும் "KingMaker“ ஆவார்.

விருதுநகரில் உள்ள நாடார் சமுகத்தினரை சாணான் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட காலம். பாண்டியர்களின் வீழ்ச்சியில் இருந்து நாடார்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். அக்காலத்தில் நாடார்கள் “கோவிலுக்குள்” செல்ல அனுமதி இல்லை.

ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயரின் முற்போக்கும்,சிந்தனையும், அப்போது அவர்களுடன் விருதுநகர் நாடார்களுக்கு ஏற்பட்ட வணிக வளர்ச்சியும் படித்த விருதுநகர் நாடார்களிடையே ஆங்கிலேயர் பால் ஈர்ப்பு இருந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சியால் நாம் வளர்ச்சி அடையலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. அப்போது ஆங்கிலேயர் ஆட்சி செய்த பிற நாடுகளில் வணிகம் செய்ய ஆரம்பித்தனர் விருதுநகர் மக்கள். இதனால் விருதுநகரில் ஆங்கிலேயரை ஆதரிக்கும், முற்போக்கு சிந்தனைகளையும் கொண்ட “JusticeParty” சக்தி வாய்ந்ததாக இருந்தது. “JusticeParty” யின் பங்கு விருதுநகர் அரசியலில் முக்கியமானது. “JusticeParty” யினைச் சேர்ந்தோர் விருதுநகர் மக்களின் வளர்ச்சிக்காகவும் நகர் வளர்ச்சிக்காகவும் பெரிதும் பாடுபட்டனர்.
“JusticeParty” யின் தூண் போன்று இருந்த V.V.RamasamyNadar, M.S.P.SenthikumaraNadar மற்றும் M.S.PeriyasamyNadar, M.S.P.Rajah போன்றோரின் சேவை மகத்தானது.

விருதுநகர் மக்களின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்தவர் காமராசர் வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் காந்திஜியின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.காமராசரின் முயற்சியால் விருதுநகரில் விடுதலைப்போராட்டங்கள் நடந்தது. “JusticeParty” யின் கோட்டையாக இருந்த விருதுநகர் காமராசரின், காங்கிரஸ் கீழ் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டது. விருதுநகரில் சில தீவிரவாத விடுதலைப் போராட்டமும் நடந்துள்ளது.

பிரசுரங்களை வெளியிடுதல், சட்டமறுப்பு இயக்கம், கொடி போராட்டம்,சத்தியாகிரகப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் என்று பல விடுதலைப் போராட்டங்களில் கலந்து சிறை சென்றனர் விருதுநகர் மக்கள். K.Kamaraj, A.S.S.S.SankarapandiyaNadar, MurugaDhanuskodi, Gurusamy, MuthusamyAasan போன்றோர்கள் விடுதலை வேட்கையில் மக்களை வழி நடத்திச்சென்றனர். அந்தப் புனிதப் போரில் வெற்றியும் கண்டனர்.

Saturday, May 28, 2011

உழைப்பால் உயர்ந்த சமுதாயம்

`உழைத்தால் உயரலாம்' என்பதற்கு முன் உதாரணம் நாடார் சமூகம்தான். நாடார் மக்களிடையே பெரும் சாதனை படைத்தவர்கள் மிகப் பலர்.

அய்யா வைகுண்டசுவாமி: எளிய நாடார் குடும்பத்தில் முத்துக்குட்டி என்ற பெயரில் பிறந்தவர். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தவர். நாடார் உள்ளிட்ட சமூக மக்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்ற அடக்குமுறைக்கு எதிராக எல்லோரையும் தலைப்பாகை கட்ட வைத்து சாதி வெறியை எதிர்த்துப் போராடியவர்.
                          
மார்ஷல் நேசமணி: குமரித் தந்தை, குமரி மாவட்டத்தின் சிற்பி. 1956ல் நாஞ்சில் நாட்டை கேரளாவோடு இணைக்க வேண்டும் என்று முயற்சித்த போது `நாங்கள் தமிழர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். தமிழ் மரபுக்கு சொந்தக்காரர்கள்' என்று மார் தட்டியதோடு, தமிழ் மரபு சீர் குலைந்துவிடக் கூடாது என்று போராடி நாஞ்சில் நாட்டைத் தமிழகத்தோடு இணைத்த தீரர்.

காமராஜர்: தமிழ் இனத்தில் ஒரு சாதாரண நாடார் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் `கிங்மேக்கரான' மாமனிதர்; பச்சைத் தமிழர். அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் ஏழைகளுக்கு `கல்விக்கண்' திறக்கப்பட்டது. சத்துணவு கிடைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர். எல்லா சமூகத்தாருக்காகவும் உழைத்த கர்ம வீரர். `நாம் பெற்ற செல்வம்' என்று ஒவ்வொரு நாடாரையும் பெருமை கொள்ளச் செய்தவர். நாடார் இனத்துக்கே பெருமை சேர்த்தவர்.

கே.டி.கோசல்ராம்: பாலைவனம் போல் வறண்டு கிடந்த பூமி. கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. இருண்ட வாழ்வோடு மக்கள் சுருண்டு வாழத் தொடங்கிய போது மழை மேகமாய் வந்து, மணிமுத்தாறு அணையை, தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்து வசூலித்து கட்ட வைத்த கடமை வீரர். சுதந்திரப் போராட்ட தியாகி.
                
                                   
பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்:மற்ற இனத்தவருக்கு இருப்பது போல் நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர். பேருந்துகளில் காலி இருக்கைகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் அமரக் கூடாது என்று இருந்த நிலையை உடைத்தெறிந்து அவர்களை சரிசமமாக உட்கார வைத்தவர். சென்னையில் உள்ள பாண்டிபஜார் இவரது பெயரில் உருவானதே...
நாடார் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, தங்களது பரம்பரை பழக்கவழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் மாற்றியமைக்க முற்பட்டனர். ஆண்கள் பார்ப்பனர் போன்று வேட்டி கட்டவும், பூணூல் போடவும் தொடங்கினர். பெண்கள் பாரம்பரியமான கனத்த ஆபரணங்களையும், காது வளையங்களையும் தவிர்த்தனர்.

விதவைகள் வெள்ளைச் சீலை கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். விதவைகள் மறுமணம் தடை செய்யப்பட்டது. (இப்போது மறுமணத்தை ஆதரிக்கிறார்கள்.) பெண்கள் தண்ணீரை தலையில் எடுத்துச் செல்வதைத் தடுத்து, இடுப்பில் எடுத்துவரப் பணிக்கப்பட்டனர்.

திருமண ஊர்வலங்களின்போது செல்வ செழிப்பினைக் காட்ட பல்லக்குகளைப் பயன்படுத்தினர். பெரும்பாலான நாடார்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள். சிலர் வைணவர்களாகவும் இருந்தனர். முருகக் கடவுள் நாடார் சமூகத்தின் சிறப்பு தெய்வம். பத்ரகாளி, மாரியம்மன், அய்யனார் என்று சிறுதெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. கோயில் திருவிழாவின்போது முளைப்பாரி எடுப்பது பிரசித்தம்.

நாடார் திருமணத்தின்போது தாய்மாமனுக்கு முக்கியத்துவம் உண்டு. கன்னியாகுமரி, சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் பெண் வீட்டார் கிலோ கணக்கில் நகை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எவ்வளவு பெரிய சொந்தம் இருக்கிறது என்பதைக் காட்ட திருமணத்தின்போது நடத்தப்படும் `அலந்தரம் செய்வது' என்ற சடங்கு மிக முக்கியமானது
       
                         ``நாடார்கள் நாடாண்டவர்கள் என்பதை இன்று நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள். இடைவிடா உழைப்பினாலும் சிக்கனத்தாலும் நாடார்கள் சாதாரண மளிகைக்கடை முதல் கம்ப்யூட்டர் துறை வரை உலகளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். மற்ற சமூகத்தவரும் பயன்பெறும் வகையில் நாடார் சமூகம் உழைத்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நாடார்களின் வெற்றி ரகசியமும் அதுவே'' என்கிறார் சென்னை, நெல்லை_தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் க்ஷி.ஜி.பத்மநாபன் நாடார்.

உண்மைதான். இன்று நாடார்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தங்கள் செல்வாக்கினை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டனர்..

             `தினத்தந்தி'யைத் தந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாமரர்கள் எழுத்துக்கூட்டி தமிழைப் படிக்க வைத்தவர் ஆதித்தனார். நாடார் மகாஜன சங்கம் உருவாகக் காரணமாய் இருந்தவர் பொறையார் ரத்னசாமி நாடார். நம் நாட்டிற்கு `தமிழ்நாடு' என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை மறக்கமுடியாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளைக்காரனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற காசிராஜன், தூக்குமேடை ராஜகோபால் ஆகியோரின் வீரம் பலருக்கு எடுத்துக்காட்டு. வானம் பார்த்த சிவகாசி பூமியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் உருவாக்கி `குட்டி ஜப்பான்' என்று சொல்ல வைத்து அனைத்து இனமக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தவர்கள் சிவகாசி பி.அய்யநாடாரும் ஏ.சண்முகநாடாரும் ஆவர்.

நீதிக்கட்சி வி.வி.ராமசாமி, விருதுநகர் சீமான் எம்.எஸ்.பி.ராஜா. வெள்ளைச்சாமி நாடார், ஏ.வி.தாமஸ், ஜெயராஜ் நாடார், டாக்டர் சந்தோஷம் என்று உழைப்பில் உயர்ந்த நாடார்களில் எண்ணற்றவர்களைக் காட்டலாம்.காவல் துறைக்கு பெருமை சேர்த்த அருள் ஐ.ஜி.யை எந்த சமூகத்தவரும் மறக்கமாட்டார்கள். 
   

இன்று கணினி உலகில் நுழைந்து உலகப் பணக்காரர்களுள் ஒருவராகத் திகழும் சிவ்நாடார், பழுத்த அரசியல் தலைவர் குமரிஅனந்தன், அரசியல் தலைவரும் நடிகருமான சரத்குமார் என்று பலரை இந்த சமூகத்தின் நட்சத்திரங்களாகக் காட்டலாம்.
      

சமுதாயத்தினர் போராட்ட வரலாறு

இன்றைய கேரளா அன்று திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியாக இருந்தது. அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், நாடார் போன்ற சில சமூகத்தினருக்கும் உயர்சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்ட கோயில்களுக்குள் சென்று கடவுளை வணங்கும் உரிமை மறுக்கப்பட்டது. இந்த அடக்கு முறையைக் கண்டு மனம் வெறுத்த இச்சமூகத்தினர் சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். இதற்கும் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாடார் இன மக்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். உதாரணமாக, 1680இல் திருநெல்வேலி மாவட்ட ஊராகிய வடக்கன்குளத்தில் கிறித்தவ நாடார் இருந்தனர். அவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள். 1685இல் அவர்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்பட்டது. 1701இல் அங்கு சுமார் 4000 கிறித்தவர் இருந்தனர்.
திருவிதாங்கூர் பகுதியில் நாடார் மக்கள் நடுவே புராட்டஸ்டாண்டு சபையினர் பணிசெய்தனர். 1780இல் பலர் கிறித்தவர் ஆயினர். ரிங்கல்டவுபே Ringeltaube என்னும் பெல்ஜிய நாட்டு போதகர் திருவிதாங்கூர் பகுதியில் அமைந்த மயிலாடி என்னும் ஊரில் நாடார் கிறித்தவப் பிள்ளைகளுக்கென்று முதல் பள்ளிக்கூடத்தை 1806இல் நிறுவினார். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1819இல் பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தைக் கிறித்தவ போதகர்கள் நாகர்கோவிலில் தொடங்கினார்கள். நாடார் சமுதாய மக்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடினர். ஒரு சமூகப் புரட்சியே வெடித்தது.
நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியக் கூடாது என்ற கொடிய பழக்கம் நிலவிய காலம் அது. நாயர் போன்ற சூத்திர சாதியினருக்கும் கீழே, ஆனால் தீண்டத்தகாதவர்களுக்கு சிறிது மேலே என்னும் சமூக நிலை அது. தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான உயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் சமூகத்து ஆண்கள் சித்ரவதை மற்றும் கொலை போன்ற இன்னல்களுக்கு ஆளானார்கள். நெய்யாற்றின் கரை, இரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் திருவிதாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815-1829) "நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது" என்று பிரகடனம் செய்தார். இப்பிரகடனம் நாடார் குலமக்கள் பலத்த கோபமடையச் செய்தது. இதனால் பல இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. அரசு ஆணையை எதிர்த்து நாடார் சமுதாயத்தினர் போராடத் தொடங்கினர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த சமூக நீதிப் போராட்டம் 1859 ஆம் ஆண்டில் உச்சக்கட்டத்தை எட்டியது. நெய்யாற்றின் கரை, நெய்யூர், கோட்டாறு போன்ற இடங்களில் கடும் மோதல்கள் நிகழ்ந்தன.
ஆனால் மக்கள் சக்திக்கு முன்னால் அரசு பணியவேண்டியதாயிற்று. சென்னை மாகாண கவர்னர் தலையிட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் மகாராஜா, நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1859, ஜுலை மாதம் 26ஆம் நாள் பிரகடனம் செய்தார். ஆயினும் நாடார் பெண்கள் மேல்சாதிப் பெண்களைப்போல உடுத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. சமத்துவம் கோரி எழுந்த மக்கள் எழுச்சி சமுதாய சீர்திருத்தத்திற்கு வித்திட்டது.
பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வீறுகொண்டு எழுந்து போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. [5] இப்படி நாடார் சமூகத்தினரின் அடக்குமுறைகளை எதிர்த்த போராட்டமும் அதில் அவர்கள் வெற்றியடைந்து மீண்டு வந்ததும் இங்கு கவனிக்கத் தக்கது